அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

புதன், 20 ஜூலை, 2011

அமெரிக்கப் படை வெளியேற்றம் ஆப்கான் தலைவிதியை மாற்றுமா?




-றவூப் ஸெய்ன்-


ஆப்கானில் பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம் அல்லது ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருகின்றது. அது ஆசியாவின் ஸ்திரப்பாட்டில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டாலும்ஆப்கானின் உள்ளக நிலைமையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை வைக்க முடியாத ஒன்றாகவே தோன்றுகின்றது.
ஆப்கான் எந்தவொரு தரச்சிறப்பையும் கொண்டிராத நாடு. ஆப்கான் என்ற உடனேயே உலக உற்பத்தில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதனது கஞ்சா பயிர்ச்செய்கையே நினைவுக்கு வருகின்றது. கலாசாரத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்கான்,பழங்குடிவாதத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் மரணத்தை எதிர்கொண்ட மாலுமிகள் குறித்த செய்திகள் செயற்கை கோள் மூலம் இடைவிடாமல் ஒளிபரப்பப்பட்டது. புத்தர் சிலை அழிக்கப்பட்ட போது உலக ஊடகங்கள் அது குறித்து ஓயாமல் பேசி வந்தன. பௌத்த நாடுகளில் அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிவிட்டன. ஆனால்கடந்த 20ஆண்டுகளாக ஒவ்வொரு 5 நிமிடங்களிலும் ஒரு ஆப்கானியர் கொல்லப்பட்டதை யாரும் பேசவில்லை.
ஆப்கான் அகதிகளின் எண்ணிக்கை 63 இலட்சம். அவர்களில் ஈரான் எல்லையை நோக்கி உள்நாட்டில் குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உள்ளடங்கவில்லை. இதுவரை உயிரிழப்பு மூலம் 10%மான மக்களையும் குடிபெயர்வு மூலம் 30%மான மக்களையும் இழந்துபோன நாடு குறித்து உலக நாடுகள் எதுவும் பேசாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
ஆப்கான் மக்கள் தொகை குறித்த மிகத்தெளிவான புள்ளி விபரங்கள் இல்லை. 1992ல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி 2 கோடி மக்கள் அங்கு வாழ்கின்றனர். கடந்த 20ஆண்டுகளாக போர் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது வரட்சிபோதிய மருந்து வசதிகள் கிடைக்காதது போன்ற காரணங்களாலோ 25 இலட்சம் ஆப் கானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
வேறு வார்த்தையில் சொல்வதாயின் ஒவ்வொரு ஆண்டும் 125,000 பேர் அல்லது ஒரு நாளைக்கு340 பேர் அல்லது 1 மணி நேரத்திற்கு 14 பேர் அல்லது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் என மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் படைவெளியேற்றம் எதிர்கால ஆப்கானின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்பம் என்பதில் ஐயமில்லை. ஆனால்ஆப்கானின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நிலைகொண்டுள்ள விவசாய சூழலின் விளைபொருளாக ஆதிக்கம் செலுத்தும் கலாசாரப் பழங்குடிவாதம் எதிர் கால ஆப்கானின் எழுச்சி குறித்து சிந்திக்கின்ற எவரினதும் கவன யீர்ப்பைப் பெறவேண்டியுள்ளது.
ஆப்கான் பெண்களுக்கு முகமில்லை. இரண்டு கோடி மக்களில் ஒரு கோடி மக்களின் முகத்தை மற்றவர்கள் பார்க்க முடியாது. தன்னுடைய மக்களில் பாதிப்பகுதியினரை அந்த நாட்டுப் பெண்களால் பார்க்கமுடி யாத ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.
பொருளாதாரத்தில் கஞ்சா பயிர்கள் தவிரஉலகத்தை ஈர்க்கும் எந்த அம்சமும் அங்கு கிடையாது. விவசாய உற்பத்தி முறையிலிருந்து பொருளாதார ரீதியாக ஆப்கான் அடுத்த கட்டத்திற்கு வரவில்லை என்பது மட்டுமல்லபழமைவாத ஆட்சியை அது ஒரு போதும் தாண்டவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பழங்காலம் தொட்டு ஆப்கான் பழங்குடி கோத்திரத்தலை வர்களாலேயே ஆளப்பட்டு வந்தது. சுதந்திர ஆப்கானின் (ஈரானி லிருந்து ஆப்கான் தனிநாடாகப் பிரிந்து போனதாகக் கூறப்படுகின்றது) முதற் தலைவராக பஷ்தூன் பழங்குடி இனத்தவரான அப்துல் அப்தாலி இருந்தார். இயல்பாக தாஜிக்ஹஜாரக்உஸ்பெக் போன்ற மற்றப்பழங் குடி மக்கள் இவரது அதிகாரத்தை ஏற்கவில்லை. எனவே ஒவ்வொரு பழங்குடிப் பிரிவினரையும் அவர்களுடைய தலைவர்களே ஆண்டு கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது. முடிவாக லோயா ஜிர்கா எனப்படும் பழங்குடிக் கூட்டமைப்பை அப்தாலி உருவாக்கினார். பின்னர் வந்த ஆட்சியாளர்களால் அம்முறை நீக்கப்பட்ட தோடுஆப்கான் நீண்டகாலமாக அந்நிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன.

ஆப்கான் இன்று அரசியல் ரீதியில் ஸ்திரமடைவதிலும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவற்றை பின்வருமாறு சுருக்கலாம்.
1. எந்தவொரு தேச அரசும் முன்னேற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரிடையேயும் தேசிய உணர்வு அவசியம். பழங்குடிப் பிரிவினை வலுவாக உள்ள ஆப்கானில், ‘நாம் ஆப்கானியர்கள்’ எனும் கூட்டு அடையாளத்திற்குள் ஈர்க்கப்படுவதற்கு ஆப்கானியர்கள் இன்னும் தயாரில்லை. ஆறு மில்லியன் எண்ணிக்கை கொண்ட பஷ்தூன்களே பிரதான இடத்திலுள்ளனர். அடுத்த படியாக தாஜிக்குகள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியன். பத்து இலட்சம் முதல் இருபது இலட்சம் எண்ணிக்கை கொண்ட ஹஜாரக்குகள்உஸ்பெகுகள் முறையே மூன்றாவதுநான்காவது இடத்தில் இருக்கின்றனர். இமாக்பார்ஸிபலூச்துருக்மென்,க்யூசெல் கோச் போன்ற பழங்குடிப் பிரிவி னரும் உள்ளனர்.
2. பழங்குடிப் பண்புடனேயே இருந்து வருவதற்கு அதன் விவசாயப் பொருளாதாரமே காரணமாகும். ஒவ்வொரு ஆப்கான் பழங்குடிப் பிரிவும் பள்ளத்தாக்கு எனும் புவியியல் பிரிவுகளுக்குள் சிக்கியுள்ளது. மிகப் பெரும் கைத்தொழில் ஆலைகளோகம்பனிகளோ ஆப்கானில் கிடையாது.
3. கல்வி அறிவீனம் அந்நாட்டின் தேசிய அபிவிருத்திக்குப்பெரும் தடையாக உள்ளது. 300 முதல்1000 மாணவர்கள் வரை படிக்கக்கூடிய 25000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் அநாதைகளையே இப்பள்ளிக்கூடங்கள் பெரிதும் ஈர்க்கின்றன. 5000பேருக்கு ஒரு வைத்தியர் என்ற நிலையே உள்ளது. தொடர்ச்சியாக இயங்கக்கூடிய எந்தவொரு பல்கலைக்கழகமும் அந்நாட்டில் இல்லை.
4. பொருளாதார அபிவிருத்தியின் அடிப்படை நிபந்தனையாக உள்ள கீழ்க் கட்டுமானங்களும் தொடர்ச்சியான யுத்தங்களால் சிதைந்து போயுள்ளன. கனிமப்பொருட்கள் ஏராளமாக ஆப்கானில் புதைந்து கிடப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்த மூல வளங்களை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான சாலைகள் வளர்ச்சியடையவில்லை. இன்னொன்று நிச்சயமற்ற எதிர்காலத்தில் இத்துறையில் யார் முதலில் முதலீடு செய்வார்கள் என்பது சவால் நிறைந்தது.
மொத்தத்தில் ஆப்கான் கல்வியிலும்கலாசாரத்திலும் முன்னேறுவதோடுதனக்கென ஒரு தேசிய அடையாளத்தை கட்டியெழுப்பும் வரை ஆப்கானின் எதிர்காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் மாற்றமுறப்போவதில்லை. பாரம்பரிய மத்ரஸா கல்வி முறையில் மூழ்கிப் போயுள்ள ஆப்கானில் பரந்துபட்ட இஸ்லாத்தின் சிந்தனைகளும் போதனைகளும் இன்னும் அந்நியமாகவே உள்ளன.
தமது பழங்குடிப் பண்பாடுகள் போன்று ஒரு பழம்பெரும் இஸ்லாமியத்தையே தாலிபான் பாணியிலான பள்ளிக்கூடங்கள் வழங்குகின்றன. இதனால்தான் அந்நாட்டின் அரைவாசி மக்களை பார்க்க முடியாத நிலைக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டுள்ளதோடுபெண்களுக்கான கல்வி முறையும் ஆப்கானில் மறுக்கப்பட்டுள்ளது. பல தசாப்த யுத்தங்களால் ஆப்கானை சிதைத்த சக்திகள்அந்நாட்டை கைத்தொழில் மயமாக்குவதிலும்கீழ்க்கட்டுமானங்களை மேம்படுத்துவதிலும் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளன. குறைந்தபட்சம் ஆப்கானில் விவசாயப் பொருளாதாரத்தை யேனும் நவீனமயமாக்குவதற்கு மேற்கு நாடுகள் உதவ வேண்டும்.
ஈரான் மதப் பிரச்சாரத்தை முன்னிறுத்தி ஆப்கானில் ஊடுருவதற்கான வாய்ப்புகள் அநேகம் உள்ளன. ஈரானின் பிராந்திய வலுவான்மைபுவியியல் முக்கியத்துவம் என்பன அதற்கு ஏதுவாக உள்ளன. எனவே அறபு-முஸ்லிம் நாடுகள் அமெரிக்கப் படையினர் முற்றாக வெளியேறும் பட்சத்தில் ஆப்கான் குறித்து கவனம் செலுத்துவது இன்றைய உடனடித் தேவையாகும். 
நடந்தே வந்தேன்நடந்தே போகிறேன்
கையில் பணமற்ற இந்த அந்நியன்
நாடு திரும்புகின்றான்
விளையாட்டுப் பொம்மைகளின்றி
இந்தக் குழந்தை நாடு திரும்புகின்றது
எனது புகலிட வாழ்க்கை எனும் சாபம்
இன்றிரவு முடிந்து விடும்
காலியாக இருக்கும் மேசை மடித்து வைக்கப்படும்
வேதனையில்பரந்த வெளிகளில்
அலைந்து திரிந்தேன்.

அனைவரும் பார்த்தது
நான் அலைந்து கொண்டிருந்ததைத்தான்
எனக்குச் சொந்தமில்லாததை
இங்கேயே விட்டுச் செல்கின்றேன்
நடந்தே வந்தேன்நடந்தே போகிறேன்.
(ஓர் ஆப்கானியக் கவிதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக