From :
"நபியே! அளவற்ற அருளாளன்தான் இந்தக் குர்ஆனை உமக்குக் கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைச் சிருஷ்டித்தான். அவனே, மனிதனுக்கு (விளக்கமாகப் பேசவும் கற்பித்தான். (55:1-4)
மனித நாகரிக வரலாற்றின் முக்கியமான காலகட்டம் மொழியின் தோற்றத்தோடு ஆரம்பமாகிறது. மனிதனுக்குத் தனது உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளியிடத் துணைபுரியும் வகையில், அவனுக்குச் சொற்களையும், மொழியும் ஆற்றலையும், அந்தப் பேசும் ஆற்றலுக்குத் துணைபுரியும் வகையில் நாவு, உதடுகள் போன்ற உறுப்புகளை வழங்கியமையும் இறைவன் மனிதனுக்கு வழங்கிய மகத்தான அருட்கொடைகளாகக் குர்ஆன் கருதுகி
"நாம் அவனக்குப் பேசக் கூடிய ஒரு நாவையும் இரு உதடுகளையும் கொடுக்கவில்லையா" (90:9)
மொழியினடியாகவே இலக்கியம் தோன்றி வளர்ந்தது. மனித நாகரிகத்தின் ஆரம்ப காலப் பிரிவிலிருந்து வரலாற்றின் எல்லாக் கால கட்டங்களிலும், எல்லாச் சமூகங்களிலும் இலக்கியம் ஏதோ ஓர் உருவில் -கவிதையாகவோ, உரைநடையாகவோ தோன்றி வளர்ந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இலக்கியம் மனித உணர்வுகள், கருத்துக்களின் வெளிப்பாட்டுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. மனிதனின் மகிழ்ச்சியையும், சோகத்தையும், களிப்பையும், கவலையையும், நம்பிக்கைகளையும், ஆசைகளையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இலக்கியம் பிரதிபலித்தது. இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு இறுக்கமானது. அது சமுதாயத்தின் அடியாகத் தோன்றி வளர்ந்து, மாற்றங்களுக்கேற்ப வளைந்து கொடுத்து மாற்றமடைந்துள்ளது.
இலக்கியம் மனிதனின் உணர்வுகள், கருத்துக்களின் வெளிப்பாடாக விளங்குவதால் அது எப்பொழுதும் ஒரு நம்பிக்கை, கொள்கை, கோட்பாட்டோடு இணைந்தே காணப்படும். மனித வரலாற்றில் அவ்வப்போது தோன்றி வளர்ந்த கொள்கைகள், இலட்சியவாதங்களுக்கேற்ப இலக்கியம் பற்றிய பல்வேறு கொள்கைகள் தோன்றி வளர்ந்துள்ளன. பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனிதனின் வாழ்வு, இம்மூன்று அடிப்படை அம்சங்களை நோக்கும் முறையிலேயே பல்வேறு கொள்கைகள், இலட்சியவாதங்களுக்கிடையே வித்தியாசங்கள் தோன்றுகின்றன.
இவ்வித்தியாசங்கள் இலக்கியம் பற்றிய கொள்கைகளிலும் வித்தியாசங்களை தோற்றுவிக்கின்றன. இலக்கியம் பற்றி இருப்புவாதம் (Existentialism), இயற்கை வாதம் (Naturalism), யதார்த்த வாதம் (Realism), குறியீட்டு வாதம் (Symbolism) ஆகிய பல்வேறு கொள்கைகள் நிலவுவதை நாம் காண முடிகின்றது. எமது சமகால இலட்சிய வாதங்களான முதலாளித்துவம், கம்யூனிஸம் போன்ற சித்தாத்தங்களும் இலக்கியம் பற்றி அவற்றிக்கே உரிய கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.
Pelkanow என்பார் எழுதிய Art and Social Life (கலையும் சமூக வாழ்வும்) என்னும் நூலில் கலை, இலக்கியம் பற்றி கம்யூனிஸ சித்தாந்தம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எமது சமகால இலட்சியவாதங்கள் அனைத்தும் பொதுவாகவும், பொதுவுடமைவாதம் சிறப்பாகவும், கொள்கைப் பிரச்சாரத்துக்காக இலக்கியத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை நாம் காண முடிகின்றது. ஏனெனில், மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களது சிந்தனை, கருத்துகளில் ஆதிக்கம் செலுத்தி, அவர்களது குணவொழுக்கங்கள், தன்மைகளை உருவாக்குவதில் இலக்கியம் மிகச் சக்தி வாய்ந்ததாகும்.
எனவேதான், பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான ஸ்டாலின் இலக்கியவாதிகள் மனித சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டக் கலைஞர்கள் எனக் குறிப்பிட்டார். எவ்வாறு ஒரு கட்டக் கலைஞன் கட்டத்துக்கு ஓர் அமைப்பு, தோற்றம், ஒழுங்கு என்பவற்றை அளித்து, அதனை நிர்மாணிக்கின்றானோ அதே போன்று இலக்கியவாதி அவனது கருத்துகள் மூலம் மனிதனின் சிந்தனை, உணர்வுகளை உருவாக்கி, மனிதன் என்ற கட்டத்தை நிர்மாணிக்கின்றான் என்ற இந்தக் கருத்து, சமுதாயத்தில் இலக்கியம் வகிக்கும் சக்தியும், பலமும் வாய்ந்த நிலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
சமுதாயச் சிந்தனையை நெறிப்படுத்துவதில் மகத்தான சக்தியான இலக்கியம் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு என்ன? இஸ்லாம் இலக்கியத்தை எவ்வாறு நோக்குகின்றது? இஸ்லாத்துக்கென்று தனிப்பட்ட இலக்கியக் கோட்பாடு உண்டா? அப்படியாயின் அதன் பண்புகள், சிறப்பம்சங்கள் என்ன? அது எவ்வகையில் மற்றக் கோட்பாடுகளிலிருந்து வித்தியாசப்படுகின்றது? போன்ற வினாக்களுக்கு விடைகண்டு, இஸ்லாமிய இலக்கியக் கோட்பாட்டை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்,
முஸ்லிம்களால் ஆக்கப்படும் இலக்கியங்கள் அனைத்தும், அது இஸ்லாத்திற்கு முரணான எந்தக் கருத்துக்களை உள்ளடக்கியிருந்தாலும் சரியே. அவை இஸ்லாமிய இலக்கியம் எனக் கொள்ளப்படும் என்ற கருத்து மயக்கம் நிலவும் இன்றைய கால கட்டத்தில் இந்த சிந்தனைத் தெளிவு அவசியமாகும். மேலும் எமக்கென ஓர் இலக்கியக் கொள்கையை வகுத்து, அதன் வழிநின்று இலக்கியம் படைத்து, சமூகத்தின் அறிவுத் தேவையோடு (Intellectual need) அழகுணர்வுத் தேவையை (Aesthtile need) யும் பூர்த்தி செய்ய இது மிகவும் அவசியமாகும்.
கலைக் கலைக்காக அன்று:
இஸ்லாமிய இலக்கியம், கலைகலைக்காகவே என்ற குறுகிய வரம்பிற்குற்பட்ட இலக்கியமன்று; அது ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்துக் கொண்ட இலக்கியமாகும். அது ஓர் உன்னதமான நோக்கமும், உயர்ந்த குறிக்கோளுமுடையதாகும். இஸ்லாமிய இலக்கியம் வெறும் இலக்கிய ரசனையையும், கலையின்பத்தையும் நோக்கமாகக் கொண்டதன்று. அது ஓர் உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான துணைச் சாதனமாகும். இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை ஆகியவற்றை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவித்து, உயர்ந்த உன்னதமான பண்புகளை அவனில் வளர்ப்பதே அதன் இலட்சியமாகும்.
இஸ்லாமிய இலக்கியம் சத்தியம், நம்மை, அழகு ஆகிய மூன்று அடிப்படை பண்புகளோடு தொடர்புடையதாகும். இஸ்லாமிய இலக்கியம் சத்தியத்தை, உண்மையை வெளிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நன்மையான வழியையே அது கடைப்பிடிக்கின்றது. சத்தியம் அல்லது நன்மை நல்ல வழியைக் கையாண்டு புலப்படுத்த அழகுணர்வை அது துணையாகக் கொள்கின்றது. இந்த அடிப்படையில் நோக்கும்போது இஸ்லாமிய இலக்கியம் ‘சத்தியம்’, ‘நன்மை’, ‘அழகு’ ஆகிய மூன்று அம்சங்களோடும் இணைந்து நிற்பதை நாம் காண முடிகிறது.
ஒவ்வொரு பொருளையும் கணிப்பதற்கு இஸ்லாம் சிறப்பாக அதற்கே உரித்தான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இந்த மதிப்பீடுகளின் நோக்கில் நன்மையானவற்றை அது ஏற்றுக் கொண்டு, தீமையானவற்றை நிராகரிக்கின்றது. சிலவற்றை அது முற்றிலும் நிராகரிக்காமல், இஸ்லாமியப் பண்புகளை அளித்து அவற்றைத் தன்னோடு இணைத்துக் கொள்கின்றது. எல்லா விடயங்களைப் பொறுத்தளவிலும் இஸ்லாம் கடைப்பிடிக்கும் இந்த கொள்கையையே இலக்கியத்தைப் பொறுத்தளவிலும் அது கடைப்பிடிக்கின்றது .
பிரபஞ்சம், மனிதன், வாழ்வு ஆகியன பற்றி விரிவான, அதற்கேயுரிய கோட்பாட்டை இஸ்லாம் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாடு இஸ்லாமிய இலட்சியவாதத்தின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டதாகும். எனவே, இந்த இலட்ச்சியத்தின் அடிப்படையில் பிரபஞ்சம், மனிதன், வாழ்வு ஆகியன பற்றிய போட்பாட்டின் மூலத்திலிருந்து உருவாகிய இலக்கியமே இஸ்லாமிய இலக்கியமாகும். இந்தப் பொதுவான விளக்கத்தின் பின்னணியில் இஸ்லாமிய இலக்கியத்துக்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறலாம்.
பிரபஞ்சம், இயற்கை, வாழ்வு, மனிதன் ஆகியவற்றை இஸ்லாம் நோக்கும் நன்மைக்கேற்ப, அவற்றை அழகியல் நோக்கில் அணுகி விளக்குவதே இஸ்லாமிய இலக்கியமாகும். பேராசிரியர், முஹம்மத் குத்ப் அவர்கள் ‘அதபுல் இஸ்லாமி’ யை அதாவது இஸ்லாமிய இலக்கியத்தை அதபுல் ஈமான் (நம்பிக்கை கோட்பாட்டின் இலக்கியம்) எனவும் வர்ணிக்கின்றார். ஏனெனில், இஸ்லாமிய இலக்கியம் (அதபுல் இஸ்லாமி) ஈமானிலிருந்தும், அதனடியாகத் தோன்றும் அகீதாவிலிருந்துமே ஊற்றெடுக்கின்றது. எனவே, ஈமானிலிருந்தும் அகீதாவிலிருந்தும் ஊற்றெடுக்காத அல்லது அவை இரண்டுக்கும் முரணான வகையில் தோன்றுகின்ற இலக்கியம் இஸ்லாமிய இலக்கியமன்று, என்ற கருத்து இதிலிருந்து பெறப்படுகின்றது.
சத்தியத்தின் குரல்:
இஸ்லாமிய இலக்கியம் உண்மை அல்லது யதார்த்தத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்டதாகும். அது சத்தியத்தை அல்லது யதார்த்தத்தைத் தாண்டுவதில்லை. அவைக்குதவாக் கற்பனைகளுக்கு அங்கிடமில்லை. இலக்கியத்தின் அழகுலகில் சஞ்சரித்தாலும், கற்பனையின் வான்வெளியில் சிறகடித்துப் பறந்தாலும் இஸ்லாமிய இலக்கியவாதி நிஜவுலகை மறப்பதில்லை. சத்தியத்தோடுள்ள உறவைத் துண்டித்துக் கொள்வதில்லை. கலாநிதி நஜீப் கைலானி அவர்கள் முஸ்லிம் இலக்கியவாதியை (அதீபுல் முஸ்லிம்) பின்வருமாறு வர்ணிக்கின்றார்: "அவனது இரண்டு கால்களும் பூமியில் ஆழப் பதிந்திருக்கும். அவனது இலட்சியங்கள் கார்த்திகை விண்மீன் குழுவைத் தொடும்’’.
இஸ்லாமிய இலக்கியம் சத்தியத்தோடு தொடர்புடையது என்று கூறும் பொழுது உள்ளதை உள்ளவாறு அப்படியே அது முழுக்க முழுக்கப் பிரதிபலிக்க வேண்டுமென்றோ, அதில் உணர்ச்சி, கற்பனை ஆகியவற்றுக்கு இடமே இல்லை என்றோ கருத்தன்று. ஏனெனில், இலக்கியம் உணர்ச்சியோடும், கற்பனையோடும் தொடர்புடையது. உணர்ச்சியும் கற்பனையும் இன்றி இலக்கியமே இல்லை. இஸ்லாமிய இலக்கியம் அடிப்படையில், உணர்வும் கற்பனையும் இணைந்த இலக்கியமாகவும் இரண்டாவதாக அது இஸ்லாத்தாடு இணைந்ததாகவும் இருத்தல் வேண்டுமென்பதே கருத்தாகும்.
அழகியல் நோக்கிலே:
இஸ்லாமிய இலக்கியம் மனித உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு மிக விரிந்த அளவில் களம் அமைத்துக் கொடுக்கின்றது. ஏனெனில், உயிர்த் தன்மையுள்ள இலக்கியம் உணர்ச்சியுடையதாக இருத்தல் அவசியம். எனவே, இஸ்லாமிய இலக்கியம் என்பது தத்துவ ரீதியாக இஸ்லாமியக் கோட்பாடுகளை விளக்கும் இலக்கியமன்று. அல்லது அது சில உபதேசங்கள், அறிவுரைகள், போதனைகளின் கூட்டுத் கலவையுமன்று. அது அவற்றை விட பன்மடங்கு விரிந்த பொருள்களை உள்ளடக்குகின்றது. இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள பொருட்களையும் இஸ்லாமியக் கோட்பாட்டின் நிலைகளனில், அழகுணர்ச்சியின் அடிப்படையில் நோக்கி விளக்குவதாகும்.
இஸ்லாமிய இலக்கியம் இஸ்லாத்தையோ அதன் கோட்பாடுகள், நிகழ்ச்சிகள் என்பவற்றையோ, அதனோடு தொடர்புடைய தனிமனிதர்களையோ மட்டும் தழுவி நிற்பதன்று. இவை அத்தனை பற்றியும் அது பேசினாலும், அதனைத் தாண்டி முழுப் பிரபஞ்சத்தையும் இஸ்லாமிய அழகியல் நோக்கில் அது தழுவி நிற்கின்றது. தென்றலில் அசைந்தாடும் மலர்கள், காலையிளம் சூரியன், வானத்தின் கண்சிமிட்டும் தாரகைகள், தெளிந்த நீரோடை, வசந்தத்தின் வரவு, மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்கள் ஆகிய அனைத்தும் இஸ்லாமிய இலக்கியத்தின் கருப்பொருளாக அமையலாம். உள்ளதை உள்ளவாறு கூறுதல் வரலாறு; அது இலக்கியமன்று. உள்ளதை உணர்ந்தவாறு கூறுதலே இலக்கியமாகும். இந்த இலக்கிய உண்மையை இஸ்லாமிய இலக்கியத்தோடு தொடர்புபடுத்திய பேராசிரியர் முஹம்மத் குத்ப், பின்வருமாறு விளக்குகின்றார்.
"ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்களை மிக உன்னத, உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஒரு சத்திய புருஷர் என வர்ணித்து விளக்குவது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் பெருமானார் (ஸல்) அவர்களை இறைவனின் பேரொளிச் சுடரின் ஒரு ஒளிப் பிழம்பாகவும், அந்த ஒளிப் பிழம்பின் வெளிச்சம் உலகின் நான்கு மூலைகளையும் ஒளிமயமாக்கியதாகவும் நோக்கி விளக்கினால் இந்த விளக்கமும், வர்ணனையும் இஸ்லாமிய இலக்கியமாகும். அதேபோன்று பத்ர் யுத்தத்தை உலகில் நன்மைக்கும்-தீமைக்கும் இடையில் நடந்த போராட்டமாகவும், அப்போரில் சத்தியத்துக்காகப் போராடியோர், அசத்தியத்துக்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் சக்தியால் தோற்கடித்தனர் என விளக்கினால் அது இஸ்லாமிய இலக்கியமன்று, ஆனால் அவர் ஒளியை இருள் விரட்டுவதாகவும், ஒளிக்கும் இருளுக்குமிடையில் நடந்த போரில் இருளை ஒளி வெற்றி கொண்டதாகவும் விளக்கும்போது அது இஸ்லாமிய இலக்கியமாகின்றது. எனவே, இலக்கியம் எந்தப் பொருளையும் கருப்பொருளாகக் கொள்ளலாம். ஆனால், அப்பொருளைக் கையாளும் வகையைப் பொறுத்தே அது இலக்கியம் என்ற அந்தஸ்தை அடைகின்றது."
எனவே, இஸ்லாமிய இலக்கியத்தின் களம் மிகவும் விரிந்தது. இலக்கியம் மனிதனின் உணர்வுகள், அனுபவங்களின் வெளிப்பாடுகள் எனில், ஒரு முஸ்லிமின் உணர்வுகளும் அனுபவங்களும் எல்லையற்றவை. ஆகவே, இஸ்லாமிய இலக்கியத்தின் களமும் எல்லையற்றது. இஸ்லாமிய சட்டவல்லுனர்கள் இஸ்லாமிய சட்டத்தைப் பொறுத்தளவில் கடைப்பிடித்த அடிப்படை விதிமுறை இஸ்லாமிய இலக்கியத்துக்கும் பொருத்தமானதாகும். அதாவது "அனைத்துப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டவை (ஹலாலானவை) -சட்டத்தால் விலக்கப்பட்டவை (ஹராம்) தவிர."
இங்கு அனமதிக்கப்பட்டவைகளின் களம் மிகவும் விரிந்ததாகவும், அவையல்லாத விலக்கப்பட்டவைகளின் வட்டம் மிகவும் குறுகியதாகவும் காணப்படுகின்றது. கடந்த பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சட்ட அறிஞர்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் பொறுத்தளவில் கடைபிடித்த இந்த நியதியை வாழ்க்கையின் அம்சங்களுள் ஓர் அம்சமான இலக்கியத்தைப் பொறுத்தளவில் ஏன் கடைப்பிடிக்க முடியாது? எனவே, இஸ்லாமிய இலக்கியம் மனித வாழ்வோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் இயற்கையோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமையலாம்.
ஒவ்வோர் இலட்சிய வாதத்துக்கும் கொள்கைக்கும் பிரபஞ்சம், மனிதன், வாழ்வு பற்றிய ஓர் அணுகுமுறை உண்டு. அந்த இலட்சியவாதங்கள் கொள்கைகளின் இலக்கியம், அந்த அணுகுமுறைகளிலிருந்தே தோன்றுகின்றது. இந்த வகையில், இந்த இலட்சியவாதங்கள் கொள்கைகளை வரித்துக் கொண்டோர் அக்கொள்கைகளைப் பிரசாரம் புரிய இலக்கியத்தை ஒரு சக்திமிக்க ஆயுதமாகக் கையாளுகின்றனர். ரஷ்ய எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் ஊழல்களையும் வர்க்கப் பிரிவினையைத் தோற்றுவிக்கும் பிரச்சினைகளையும் பொதுவுடமைச் சமுதாயத்தின் சிறப்பியல்புகளையும் மிகவும் நுட்பமாகச் சித்தரிப்பதைக் காணலாம். அதேபோன்று அமெரிக்க எழுத்தாளர்கள் தனிமனித சுதந்திரத்தின் சிறப்பையும், பொதுவுடமைச் சமுதாயத்தின் சீர்கோடுகளையும் சித்தரிக்கும் வகையில் இலக்கியம் படைப்பதை நாம் காணலாம். எனவே, இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இஸ்லாமியக் கோட்பாடுகளின் வரையறைக்குட்பட்டு இஸ்லாமிய இலட்சியத்தின் சிறப்பினைக் கூறும் இலக்கியங்கள் ஏன் தோன்ற முடியாது?
இஸ்லாமிய இலக்கியத்தின் அவசியம்:
பல்வேறு இலட்சியவாதங்களும், கொள்கைகளும் மனிதனின் சிந்தனையிலும் உள்ளத்திலும் ஆதிக்கம செலுத்தப் போராடும் இன்றைய காலகட்டத்தில், இஸ்லாமிய மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் இப்போராட்டக் களத்தில் இஸ்லாத்தின் பலன்மிக்க ஆயுதங்களாக அமையலாம். ஆனால், இத்துறையில் முஸ்லிம் உலகில் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறல் வேண்டும்.
எமது உடனிகழ்கால இஸ்லாமிய இலக்கியங்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் நோக்கி, இஸ்லாத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆராய்ந்து பல நூல்களை வெளியிட்டு, முஸ்லிம் சமூகத்தின் எமது சமகால அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். ஆனால், மக்கள் அறிவு மட்டும் படைத்தவர்களல்லவர். மக்களின் அறிவுத் தேவை ஆராய்ச்சி நூல்களால் பூர்த்தி செய்யப்படுவது போன்று, அழகியல் உணர்வு பற்றிய தேவைகள் இலக்கியம் மூலமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு இஸ்லாமியக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் மூலமாக மக்களின் அழகியல் உணர்வு பற்றிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத விடத்து, அவர்கள் இந்த உணர்வின் தேவையை நிறைவுசெய்ய வேறு இலக்கியங்களின் துணையை நாடுவர். பசியால் வாடுபவன் வயிற்றுப் பசிக்கு, கிடைத்த எந்த உணவையும் உண்டு தனது தேவையைப் பூர்த்தி செய்ய முனையும்பொழுது, சிலபோது அந்த உணவு அவனது உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும் அமையலாம். இதேபோன்று அவனது அழகியல் உணர்வு பூர்த்தியாக அவன் நாடும் இலக்கியம் அவனது இஸ்லாமிய நம்பிக்கைகளும் அவனது ஒழுங்கமைவிற்கும் கூட ஊறு விளைவிக்கும் வகையில் அமையலாம்.
இன்று முஸ்லிம்களின் சிந்தனை, நம்பிக்கை, ஒழுங்கமைப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் கவிதை, சிறுகதை, நாடகங்கள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவி வருவதாக முஸ்லிம் உலகில் குரல் எழுப்பப்படுகின்றது. ஆனால், இவ்வாறு குரல் எழுப்புவதாலோ, அத்தகைய இலக்கியங்களைத் தடைசெய்வதாலோ பிரச்சினை தீர்ந்து விடாது. அந்த இடைவெளியை நிரப்ப, மாற்று வழியாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு, வரப்புக்குட்பட்ட கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள் உருவாக்கப்பட்டு, இளைஞர்களின் அழகியல் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இன்றைய இஸ்லாமிய இலக்கியங்கள் இத்துறையியல் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே கூறல் வேண்டும்.
வரலாற்று ஒளியிலே:
ஆனால், கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இலக்கியம் இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றியிருப்பதை இஸ்லாமிய வரலாறு உணர்த்துகின்றது. இஸ்லாத்துக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரான சவால்களை அறிவு ரீதியாக இயக்கங்கள், நூல்கள் சமாளித்தது போன்று, அழகுணர்வின் வழிநின்று இலக்கியமும் சமாளித்து ஒரு மகத்தான பங்கை நிறைவேற்றியுள்ளது.
இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கெதிரான ‘ஸிந்தீக்குகள்’ (Zindig) குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்து, சிலுவைப் போர் ஆகிய சக்திகளுக்கெதிராக இலக்கிய களத்திலும் போர் தொடுக்கப்பட்டது. பல கவிஞர்கள் இவை பற்றிய கவிதைகளைப் பாடியுள்ளனர். காதிஸிய்யாப் போர்க் களத்தில் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் போர் வீரர்களை மட்டுமன்றி திருக்குர்ஆனைச் சிறப்பாக ஓதும் காரிகளையும், அறிஞர்களையும், கவிஞர்களையும் கூட இஸ்லாமிய அணியில் ஒன்று திரட்டியிருந்தார். ஷம்மாக் (Shammakh), அல் ஹதீஆ (Al-Hathia), அவ்ஸ் இப்னு மஃஸா (Aws ibnu maza), போன்ற கவிஞர்களை அவர் அங்கு ஒன்றுதிரட்டியிருந்ததாக வரலாற்று ஆசிரியர் அத்-தபரீ குறிப்பிடுகின்றார்.
எனவே, போர் வீரர்கள் இராணுவத் தேவைகளையும், காரிகள் மக்களின் ஆன்மீகத் தேவைகளையும், அறிஞர்கள் அறிவுத் தேவைகளையும், கவிஞர்கள் அழகியற் தேவைகளையும் காதிஸிய்யா போர்க்களத்தில் பூர்த்தி செய்தனர்.
முஸ்லிம்கள் படைக்கும் இலக்கியங்கள் அனைத்தும் இஸ்லாமிய இலக்கியமாகுமா?
ஆனால், காலப்போக்கில் முஸ்லிம்கள் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் செலுத்தினாலும், இஸ்லாமிய நெறிமுறைகளில் வரம்பிற்குட்பட்ட, இஸ்லாமிய இலக்கியத்தைப் படைக்கும் பணியை மறந்தனர். மக்களின் அழகியல் தேவைகள் புறக்கணிக்கப்பட்டன. மக்கள் அத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறு வகையான இலக்கியங்களை நாடினர். இவ்விலக்கியங்கள் பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களால் இயற்றப்பட்டதாகவும் சிலபோது இஸ்லாமிய சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு ஊறு விளைவிப்பனவாகவும் அமைந்தன.
முஸ்லிம்கள் கூட, இஸ்லாமிய இலக்கிய கோட்பாடு பற்றிய எத்தகைய பிரக்ஞையுமின்றி இலக்கியம் படைத்ததால் அதிலும் இஸ்லாத்தின் முத்திரை காணப்படாதது மட்டுமன்றி, சிலபோது அதற்கும் முஸ்லிம் அல்லாதோரின் இலக்கியத்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படவில்லை.
எனவே, இஸ்லாமிய இலக்கியக் கோட்பாடு பற்றிய ஒரு தெளிவு இன்று மிகவும் அவசியமாகும். முதலில் இஸ்லாமிய இலக்கியம் என்றால் என்ன? அதன் தன்மைகள், பண்புகள் யாவை? அதன் எல்லைக் கோடுகள் யாவை? என்பன பற்றிய ஒரு தௌவு ஏற்படின் அந்த எல்லைக் கோட்டின் வரம்பிற்குள் உருவாகும் இலக்கியங்கள் -அவை கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், -எதுவாயினும் சரியே, அவை இஸ்லாமிய இலக்கியமாகக் கணிப்பிடலாம்.
இஸ்லாம் எந்த இலக்கிய உருவத்திற்கும் எதிரானதன்று; ஏனெனில், ஒவ்வொரு காலப் பிரிவுக்கும் அதற்கே உரிய இலக்கிய உருவம் உண்டு. ஒரு காலப்பிரிவில் கவிதை, காவியம் முக்கிய இலக்கிய உருவங்களாக விளங்கின. ஆனால், இன்று காவியம், அதன் நிலையை இழந்துவிட்டது. கவிதையோடு, நாவல், சிறுகதை, நாடகம் ஆகிய புது இலக்கிய உருவங்கள் தோன்றியுள்ளன. இந்டித இலக்கிய உருவங்களை இஸ்லாமிய ஷரீஅத்தின் கட்டுக்கோப்பிற்குட்பட்டு பயன்படுத்துவதன் மூலம் எமது சமகால முஸ்லிம் சமூகத்தின் அழகியல் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும்.
இன்றைய எமது காலகட்டத்தில் ஒவ்வொரு கொள்கையினதும் பிரசாரத்திற்காக இலக்கியம் ஒரு பலம் மிக்க ஆயுதமாகக் கருதப்படுகின்றது. எனவே, இலக்கியத்தை ‘இஸ்லாமிய தஃவத்தின்’ ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை இன்று தோன்றியுள்ளது.
எதிர்காலப் பணியை நோக்கி:
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய தெளிவு, அதன் பணி பற்றிய அவசியம் உணரப்பட்டு, அதனை உருவாக்குவதற்கான விரிந்த அளவிலான பணி மேற்கொள்ளப்படுவதன் அவசியத்தை எமது சமகால அறிஞர்கள் சிலர் உணர்ந்து அப்பணியில் சில ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை நல்ல அறிகுறியாகும். இம்முயற்சிகளை அவற்றின் பல்வேறு வளர்ச்சிப் படிவங்களை விளக்குவதன் மூலம் முஸ்லிம் உலகில் இஸ்லாமி இலக்கியமொன்றை உருவாக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னேறி வரும் பான்மையை நாம் காண முடிகின்றது.
இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் தனிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட இஸ்லாமிய இலக்கியம் என அழைக்கத்தக்க இலக்கிய வகையொன்று முஸ்லிம் இலக்கியவாதிகளினால் தோற்றுவிக்கப்படல் அவசியம் என்ற கருத்தை இன்றைய முஸ்லிம் உலகின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவரான செய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள், டமகஸ்கஸிலுள்ள மஜ்மஉல் இல்மி அல்-அறபியின் உறுப்பினர்களுள் ஒருவராக அவர்கள் தேர்தெடுக்கப்பட்டபொழுது, முதன் முதல் தெரிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் தங்களது ‘அத்-தாரிக் பிக்ரதுன் வ மின்ஹாஜுன்’ என்ற நூலில் இஸ்லாமிய இலக்கியத்தை உருவாக்குவதற்கான அவசியத்தை வலியுறுத்தி, இஸ்லாமிய இலக்கியத்தின் பண்புகளையும் விளக்கியுள்ளார். செய்யித் குத்பின் சகோதரர் பேராசிரியர் முஹம்மத் குத்ப் அவரக்ளது ‘மன்ஹஜுல் பன்னுல் இஸ்லாமி’ எனும் நூலில் இஸ்லாமிய இலக்கியத்தின் பண்பினை மிக விரிவாகவும், விளக்கமாகவும், ஆழமாகவும் ஆராய்நதுள்ளார். நஜீப் கைலானி என்னும் அறிஞர் தனது ‘அல்-இஸ்லாமியா வல் மதாஹிபுல் அதபியா’ என்னும் நூலில் இலக்கியம் பற்றிய இஸ்லாமிய கோட்பாட்டையும், இஸ்லாமிய இலக்கியத்தின் எல்லைக் கோடுகளையும் விரிவாகவும் ஆராய்ந்துள்ளார். இமாதுத்தீன் கலில் என்னும் அறிஞர் தனது ‘பிந்நக்தில் இஸ்லாமியில் முஆஸிர்’ என்னும் நூலில் சமகால இஸ்லாமி இலக்கிய முயற்சிகள் சிலதை விமர்சித்துள்ளார்.
இத்தகைய அறிவு ரீதியான முயற்சிகளுக்கு முஸ்லிம் கலாநிலையங்களில் ஆக்கபூர்வமான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் காண முடிகின்றது. றியாதிலுள்ள இமாம் முஹம்மத் ஸுஊத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பிற்கான பீடங்களில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஆய்வுத் தலைப்புகளில் ஆராய்ச்சி நடாத்த மாணவர்கள் தூண்டப்பட்டு, இத்துறையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்துறையில் அப்துல்லாஹ் ஹம்த் அல்-வய்ஷக் என்பார், கலாநிதி அப்துர்ரஹ்மான் ரஃபத் பாஷாவின் கீழ் தனது பட்டப்படிப்பிற்கான இஸ்லாமிய இலக்கியம் என்ற ஆய்வு நடாத்தி, ‘அல் அதப் பீ கித்மதில் ஹயாதி வல் அகீதா’ என்னும் தலைப்பில் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையை அப்பல்கலைக்கழகம் அண்மையில் பிரசுரித்து வெளியிட்டுள்ளது.
இத்துறையில் மிகச் சிறப்பான ஒரு முயற்சி லக்னோவிலுள்ள நத்வதுல் உலமாவில், மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. சென்ற (1981) ஜூன் மாதத்தில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் முஸ்லிம் உலகில் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த உலக முஸ்லிம் அறிஞர்கள் பலர் இஸ்லாமிய இலக்கியம் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இவ்வாய்வுக் கட்டுரைகள் நத்வாவின் மாதாந்தச் சஞ்சிகையான அல் பஃதுல் இஸ்லாமியின் 1981ம் ஆண்டு ஒக்டோபர் இதழில் பிரசுரிக்கப்பட்டது.
இந்த முயற்சிகள் முஸ்லிம் உலகில் இத்துறையில் மிகத் தெளிவான, உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை உணர்த்துகின்றன. இத்துறையில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களும் தீவிர கவனம் செலுத்தல் அவசியம். எனவே எமது மரபு வழிநின்று, எமது கோட்பாட்டில் காலூன்றி, இலக்கியம் படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பிற இலக்கியங்களின் தாக்கங்களிலிருந்து எமது இளம் சந்ததியினரைப் பாதுகாப்பதோடு எமக்கென்று ஒரு தனிப்பட்ட இலக்கியப் பாரம்பரியம் தோன்றவும், இஸ்லாமிய தஃவத்தின் பணிகளுக்கு இலக்கியக் களம் அமைத்துக் கொடுக்கவும் வழிபிறக்கும்.
இஸ்லாமிய சிந்தனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக