இலங்கை முஸ்லிம் சினிமா 01, 02 & 03
FROM :
ஏபிஎம். இத்ரீஸ்முன்னோடிகளும் பங்களிப்பும்
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் எவ்வளவு தொன்மையானதோ அதே போன்றது தான் அவர்களின் சினிமாத் துறைப் பங்களிப்பும். தனித்துவமாக உருவாக்க முடியாது போனாலும் முன்னையோரின் வியப்பூட்டும் பங்களிப்பும் அவர்களின் துணிச்சலான முன்னெடுப்புக்களைப் பார்க்கும் போது நமக்கும் அக்கலை மீது ஆர்வம் ஏற்படுவதோடு எமக்கேயுரிய பண்பாட்டுத் தனித்துவத்தோடு கையாள வேண்டும் என்ற பிரக்ஞையும் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது.
ஒரு பண்பாட்டு வெற்றிடத்திலிருந்து எந்த ஒரு கலையும் தோன்றி வருவதில்லை. திரைப்படமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை மிகுந்த செல்வாக்குடன் இயங்கி வந்த பார்ஸி தியேட்டர் பாரம்பரியத்திலிருந்து ஒட்டு மொத்த இலங்கை சினிமா வரலாறும் தொடங்குகின்றது என்பது மிகத் தெளிவான வரலாறாகும்.
இலங்கை சினிமாவுக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு தொன்னூறு வருடங்களுக்கு முன்பு தொடங்குகின்றது. பார்ஸி நாடகக் கம்பனிகளின் வருகையுடன் அது ஆரம்பமாகின்றது எனலாம். 1920 ம் ஆண்டு அளவில் இந்தியக் கதை ஒன்றைத் தழுவி ராஜகீய விக்ரம என்ற பெயரில் மேடையேற்றி வந்தார்கள்.
வெள்ளவத்தை பிளாஸா தியேட்டரின் உரிமையாளராக இருந்து பல வெளி நாட்டுப் படங்கள் இறக்குமதி செய்து காண்பித்து வந்தது. ஜீ.ஏ. நூர் பாய் இந்நாடகத்தை சிங்களப் படமாக உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அக்காலத்தில் சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். இவருக்கு இந்தப் படத்தில் கதா நாயகப் பாத்திரம் வழங்கப்பட்டது. அந்த இளைஞர் தான் பின் நாளில் பிரபல அரசியல்வாதியாக விளங்கிய என். எம். பெரேரா ஆவார். ராஜசீய விக்ரம என்ற படத்தில் டவர் ஹோல் நடிகர்ளான அல்பர்ட் பெரேரா, ரெஜினோல் பெரேரா, பேர்சி பெரேரா, போன்றோர்களும் நடித்தார்கள். மெளனத் திரைப்படமாக உருவான இப்படம் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே திரையிடப்பட்டது. இதன் பிரதியொன்றை இலங்கைக்கு கொண்டு வரும் வழியில் தீக்கரையாகி விட்டதாம். இந்தத துரதிஷ்டமான சம்பவத்தினால் முதலாவது சிங்களப்படத்தை இலங்கையர்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக