அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

குழந்தைகளும் பாலியலும்


ஏபிஎம். இத்ரீஸ்

பால் நிலை அடையாள நெருக்கடி
குழந்தை தனது பால் நிலையைத் தீர்மானிப்பது அல்லது இன்னொரு பால் நிலையைச் சார்ந்தவர்களின் அல்லது உடல் கூற்றின் தொடர்ச்சியான மறுதலிப்பு இருந்தாலும் தனது பால் நிலை அடையாளம் இல்லாத இன்னொரு பால் நிலையாக மாறுவதில் உள்ள தீராத ஆவல் அல்லது மற்றொரு பால் நிலைச் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது அல்லது தனக்கு விருப்பமான பால் நிலையாக மறுவதை வெளிப்படையாகத் தெரிவித்தல் தான் ஒரு குழந்தை எதிர் கொள்ளும் மிகப் பெரும் துயரமாகும்.
இந்தப் பால் நிலைக் கோளாரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கடின விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டுவர். ஆண் குழந்தைகளைப் போல விளையாடுவர். ஆண் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை சேகரிக்க ஆரம்பிப்பர் (விளையாட்டுத் துப்பாக்கி) பொம்மை விளையாட்டுக்களில் இருந்து படிப்படியாக ஒதுங்குவர். சில வேளை உட்கார்ந்து சிறு நீர் கழிப்பதை வெறுப்பர். சில போது தம்மிடமும் ஆண்குறியை போல் ஒன்று இருப்பதாக வாதாடுவர். இந்த வகைப் பென் குழந்தைகள் தனக்கு மார்பகம் வளரவேண்டுமென்று கூறுவர்.
இந்த வகை கோளாறுள்ள ஆண்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் வெளிப்பாடுகளாக பெண் குழந்தைகளின் ஆடைகளை அணிய விரும்புதல், பொம்மை விளையாட்டுக்களில் ஈடுபடுதல் அல்லது அதில் பிடிவாதமாக இருத்தல், அவ்வாறே ஆண் குழந்தைகளுடன் விளையாடுவதைத் தவிர்த்தல், தமது சகோதரிகள், தாய் மாரைப் போன்று ஆடை அணிய விரும்புதல் போன்ற அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறான பாதிப்புள்ள ஆண் குழந்தைகள் வளர்ந்து பெரியவராகும் போது பெண்களாக மாறுவதும் உண்டு. அப்போது அதன் ஆண் உறுப்பு சிறுத்துப் போவதும் உண்டு இந்த உறுப்பு மாற்றத்தை அவர்கள் மறைப்பதற்கும் முற்படுவார்கள்.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இந்தப் பால் நிலை அடையாள நெருக்கடி மிக அரிதான விடயம் என்று கருதிவிடாதீர்கள். பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகளிடம் தான் இந்தப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. ஆனல் இந்தப் பிரச்சினை ஏற்பட்டால் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகள் தான் அதிகம் நெருக்கடிக்குள்ளாகின்றனர். இதற்கு சமுக கண்ணோட்டம் தான் பிரதான காரணமாகும். ஒரு ஆண்குழந்தை பெண்குழந்தையாக மாறுவதைச் சமூகம் வித்தியாசமாக பார்ப்பதைவிட ஒரு பெண்குழந்தை ஆணாக மாறுவதைப் பார்க்கும் விதம் கடுமையாக உள்ளது.
இந்தப் பால் நிலை திரிந்த ஆண்குழந்தை 15க்கு பெண் ஒன்று என்ற விகிதத்திலேயே மாற்றம் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும் பாலும் குழந்தைப் பருவத்தில் அரவாணிகளாக இருக்கும் பெண் குழந்தைகளின் வெளிப்படையான மாற்றங்கள் கட்டிளமைப் பருவத்தில் மறைந்து விடுகின்றன. பெரும்பாலும் இப் பால்நிலை நெருக்கடி நான்கு வயதுக்கு முன்னர் ஆரம்பமாகின்றது. இடைநிலைப் பாடசாலைக் கட்டத்தில் இந் நெருக்கடி அதிகரிக்கின்றது. குறிப்பாக 7-8 வயதுகளில் இதனை அவதானிக்கலாம் 33-66 வீதம் வரையிலான ஆண் குழந்தைகளிடம் இந்நெருக்கடியைக் காணலாம். அவர்கள் கட்டிளமைப் பருவத்தில் பெண்குழந்தைகளின் மனவெழுச்சியைப் பெற்றிருக்கின்றனர். பெண்குழந்தைகளில் மிக குறைவான தொகையினரே இப்பால் நிலை அடையாள நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது இந் நெருக்கடி தொடர்ந்து செல்கிறது பண்புரீதியாக இதனை நாம் மூன்றாக பிரித்து நோக்கலாம்
  1. 1. அரவாணியாக மாறிய குழுவினர் (Transy  estat)
இவர்கள் மற்றப் பாலினரின் ஆடைகளை விரும்பி அணிவதில் கவனம் செலுத்துவர். இது யாரும் காணாத நிலையில் இரகசியாமாக நடைபெற்றுவரும்.
  1. 2. சமப்பால் உறவில் நாட்டமுள்ள குழுவினர் (Homo sexual)
இவர்கள் தமக்கு சமமான பால் நிலையில் உள்ளவர்களை கவர்ந்திழுப்பதில் ஆர்வம் காட்டுவர்.
  1. 3. பால் நிலை திரிபுக்குட்பட்ட பிரிவினர்
இவர்களின் பால் நிலையில் பெரும் புரட்சிகர மாற்றம் ஏற்பட்டிருக்கும். தமது பால் நிலையை மாற்றிக் கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுவர். ஹோமன்ஸ் மாற்றத்தையும் அடைந்திருப்பர்.
எனவே பெற்றோர் இப்பால் நிலை மாற்றத்திற்கான தெளியான அடையாளங்கள் கிடைக்கும் வரை இதனை பொருட்படுத்தாது இருப்பது இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதன் அடிப்படை நடவடிக்கையாக இருக்கும். பதற்றமடைதல், அமைதி இழத்தல், இப்பிரச்சினை குறித்துக் கடுமையாக வருந்துதல் போன்ற பண்புகள் முதிர்ச்சிக்கட்டம் வரைக்கும் தொடர்ந்திருக்கும். இப்பால்நிலை மாற்றத்திற்கான ஏதாயினும் ஒரு அடையாளத்தைப் பெற்றோர் அவதானிக்குமிடத்து தீவிர நிலைக்கு செல்லாதிருப்பது அவசியமாகும்.
ஏனெனில் குழந்தை போட்டிக்காகவும் விளையாட்டுக்காகவும் எதிர் பாலினரின் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும். அதாவது மிகவும் கட்டிறுக்கமான பால் நிலை அடையாளத்தைப் பேண வேண்டும் என்பதற்காக குழந்தைப் பருவத்தில் கடைசிக் காலகட்டங்களில் குறித்த செயற்பாடுகளில் மட்டும் தான் ஈடுபட வேண்டும் என நிர்ப்பந்திக்காதீர்கள். குறிப்பாக வீரத்தின் குறீயீடாக ஆணை மட்டும் பாவனை செய்தல் என குழந்தைகள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்காதீர்கள். தற்காலத்தில் சிறந்த ஆளுமை என்பது ஆணின் பண்புகளும் பெண்ணின் பண்புகளையும் பெற்றவர்களே என்பதை மறந்து விடாதிர்கள். ஒரே நேரத்தில் ஆண்மை + பெண்மை செயல் வாதத்தில் மூலமாக அல்லது உளவியல் மூலமாக முகாமை செய்யக்கூடிய கலப்பு ஆளுமை கொண்டவர்களே சிறந்த தலைவர்களாக மதிப்பிடப்படுகின்றனர். அத்தகையவர்கள்தான் இடத்திற்கேற்ற தலைமைத்துவத்தை வழங்குவார்கள். கட்டிறுக்கமான பால் நிலை அடையாளத்தை பேணி வளர்க்கப்படும் குழந்தைகள் தனது சுயத்தை இழந்து விடுவதாகவும் கருத்து வெளிப்பாடற்றவர்களாக மாறிவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு மறாக ஆண் + பெண் இரண்டு ஆளுமைகளையும் ஒருங்கே பெற்றவர்கள் வித்தியாசமான/முரண்பட்ட கட்டங்களில் மிகச் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர். பால் நிலை பற்றிய சமுக மதிப்பீடுகளை மிகப் பொருத்தமான நடத்தைக் கோலத்தை இத்தகைய கலப்பு ஆளுமை கொண்டவர்கள் வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக இரண்டு பண்புகளையும் கொண்ட ஆண் குழந்தைகள் அடுத்தவரைக் கவனிப்பதில், பிறருடன் சேர்ந்து விளையாடுவதில் மிகச் சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்துவர். அவ்வாறே ஆணின் ஆளுமையைப் பெற்ற பெண் குழந்தைகளும் சமூக அளுத்தங்களுக்கு ஆளாகாமல் தமது பணியைச் செவ்வனே நிறைவேற்றுவர். கலீபா உஸ்மானின் மறைவை அடுத்து நபிகளின் மனைவி ஆயிஷா இஸ்லாமிய அரசியல் தலைமைத்துவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் நபிகளின் இந்தப் பயிற்றுவிப்பு முறைதான். நபிகள் கறாரான ஆண் பெண் வரையறையைச் செய்யவில்லை என்பது அவர் சீறாவை படிக்கும் போது புரிந்து கொள்ளமுடியும்.
பல்கலைக்கழக மட்டத்தில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு தனது முடிவுகளைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளது. 50% மாணவர்கள் பாரம்பரியமான பால் நிலை அடையாளத்தையே பிரதிபலிக்கின்றனர். 15% மாணவர்களில் அடுத்த பாலாரின் இயல்பு மேலோங்கிக் காணப்படுகிறது. 35% மாணவர்கள் இருபால் கலப்பு ஆளுமை உள்ளவர்களாக இருக்கின்றனர். 50% முன்னோடியான பெண்கள் தமது குழந்தைப் பருவத்தில் ஆண்களாய் செயற்பட்டதுதான் தமது முன்னேற்றத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர். ஆதாவது வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்றமை, ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியமை, ஆண் குழந்தைகள் அணியும் ஜீன்ஸ் அணிந்தமை பற்றிக் குறிப்பிட்டனர். அதே நேரம் அவர்கள் தமது பால் நிலை அடையாளம் எது என்பதையும் அவர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். அவ்வாறே வன்முறைகளில் ஈடுபடாத, கடினமான விளையாட்டுக்களில் ஈடுபாடுகாட்டாத, கடினமான குரலில் உரையாடாத, குழந்தைகளைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை. உயிரியல் ரீதியாக தமது அடையாளத்தைப் பிரித்தரியத் தெரிந்திருந்தால், அந்தப் பிறப்பு முறையை அது திருப்தியுடன் ஏற்றுக் கொண்டிருந்தால் நாம் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
பால் நிலை அல்லது பால் நிலை அடையாளத்தில் குழந்தையிடம் பிரச்சினை அல்லது நெருக்கடி இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொண்டால் போதுமானது.
  1. குழந்தை தொடர்ச்சியாக அடுத்த பால் நிலை அடையாளத்தைப் பற்றிச் சிறப்பித்துக் கூறிக் கொண்டிருத்தல். உதாரணமாக “நான் ஒரு சிறுமி“ அல்லது நான் வளர்ந்து பெரியனவனானால் ஒரு உம்மாவாக இருக்கவே விரும்புகிறேன்.
  2. குழந்தை தொடர்ச்சியாக அடுத்த பாலினரின் ஆடையை அணிந்து கொண்டிருத்தல்.
  3. குழந்தை அடுத்த பாலினரின் செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டினால், அல்லது அடுத்த பாலினரைப் போல விளையாடினால், அல்லது சமப் பாலினரின் விளையாட்டுக்களில் வெறுப்புக் காட்டினால்
  4. குழந்தையின் உடல் தோற்றம் மற்றப் பாலினரின் உடல் தோற்றத்தைப் போல் இருந்தால் உதாரணமாக ஒரு பெண் குழந்தையைப் பார்த்து உங்கள் உறவினர்கள் இது என்ன ஆண் குழந்தையா என்று வினவினால் அல்லது பெரியவர்கள் பால் நிலை அடையாளம் தெரியாமல் அன்பு செலுத்த முற்பட்டால்
  5. பால் நிலை நெருக்கடிக்குள்ளான குழந்தையை சகபாடிகள் வெறுத்து ஒதுக்கினால், நையாண்டி பண்ணுவதைக் கண்டால்
  6. முகக் குறிகள், உடல் மொழிகள், குரல் என்பவற்றில் அடுத்த பாலாரின் அடையாளங்கள் வெளிப்பட்டால் அல்லது கடுமையான சமுக விமர்சனத்தைக் கண்டு இச்செயற்பாடுகளை குழந்தை மறைக்க முற்பட்டால்
குழந்தைக்குப் பால் நிலையைத் தீர்மானிப்பதில் நெருக்கடி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே குழந்தையை நெருக்கடி நிலையில் இருந்து விடுவிப்பதாக இருந்தால் அல்லது குழந்தைக் கேற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால் பால் நிலை அடையாளத்தைக் கறாராகப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு தெரிவுக்கான நிறையச் சாத்தியப்பாடுகளை ஏற்பாடு செய்யுங்கள். இருபால் நிலையும்  கலந்த ஆளுமையைப் பெறுவதோடு தனது உண்மையான பால் நிலை அடையாளத்தை ஏற்றுக் கொள்வதற்குப் படிப்படியாக உதவுங்கள். எதிலும் அவசரப் பட்டு அடிதடியில் இறங்காதீர்கள்.
பெண் தன்மையுள்ள் ஆண் குழந்தைகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பருவ வயதுக்கு முன்னால் கட்டிளமைப் பருவத்திற்கு முன்பு தனது பால் நிலை அடையாள நெருக்கடிக்குள்ளாகும் ஆண் குழந்தைகள் இதற்கு நேர்மாறாக உள்ளன. 4-12 வயதுக் கிடைப்பட்ட ஆண் குழந்தைகள் மிகக் குறைவான பெண் தன்மையும் கூடுதலான ஆண் தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். பெண் குழந்தைகள் ஆடையை அணிவதிலான விருப்பத்தை மறைப்பதிலும் பெண்களுக்கான முகக்குறிகள், போலச் செய்யும் விளையாட்டுக்கள் போன்றவற்றிலும் இவர்கள் ஆர்வம் காட்டுவர். பெற்றோருடன் இந்தவகை ஆண் குழந்தைகள் முரண்படுபவர்களாக இருப்பர்.
காரணங்கள
  1. பெற்றோர் இல்லாத வீடுகளில் அல்லது நீண்ட காலத்துக்கு பெற்றோர் தொடர்பில்லாமல் இருக்கும் வீடுகளில் வளரும் குழந்தைகளிடம் தான் இத்தகைய பெண் தன்மையான செயற்பாடுகள், ஆர்வங்கள், போக்குகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போன்று தாய் இல்லாத வீடுகளில் வளரும் பெண் குழந்தைகளிடம் ஆண் தன்மை அதிகமாகக் காணப்படும்
  2. பெற்றோருடன் மிக இறுக்கமான பிணைப்புள்ள குழந்தைகளிடமும் அடுத்த பாலினரின் செயற்பாடுகள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது தந்தையுடன் அதிகம் அன்பு செலுத்தும் பெண் குழந்தைகள் அல்லது தாயிடம் அதிகம் அன்பு செலுத்தும் ஆண் குழந்தைகள் தன்னையும் பெற்றோரின் பால் நிலையில் வைத்தே கற்பனை செய்து கொள்கின்றது. தான் மாறுபட்ட பால் நிலையைக் கொண்டவள்/ கொண்டவன் என்பதைத் தீர்மானிப்பதற்கு அதிகரித்த பாசமும் அன்பும் தடையாக அமைகின்றது.
  3. சில பெற்றோர் தமது குழந்தைகளை மற்றப் பால் நிலையில் வைத்துப் பார்க்க விரும்புவதும் இப்பால் நிலை நெருக்கடி தோன்றுவதற்கான காரணமாகும். அதாவது ஆண் குழந்தையை பெண்னெனவும் பெண் குழந்தையை ஆண்னெனவும் பாவனை செய்து அழைத்து உறவாடுவதைக் குறிப்பிடலாம்.
  4. சில தாய்மார் ஆண்களை /ஆண் வர்க்கத்தை வெறுப்பதும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இத்தாய்மார் தமது ஆண் குழந்தைகளிடம் பெண் நடத்தைகளை அவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். சில போது இத்தாய்மார்கள் ஆண்களுக்கே உரிய கடுமை, வன்தன்மை, உடல் மொழி போன்றவற்றைக் கொண்டிருப்பர். இதனால் அத்தாய் தனது ஆண் குழந்தை பெண்ணைப் போன்று இருக்க வேண்டுமென்று ஆசைப் படுவதாகக் கூறப்படுகிறது.
  5. குழந்தைகளிடம் வெளிப்படும் இந்தப் பால் மாறுபாடுகளும் செயற்பாடுகளும் பெற்றோர் தூண்டிவிடுவதும் அல்லது மௌனமாக இருப்பதும் அல்லது பெரிதுபடுத்தாமல் இருப்பதும் ஒரு காரணமாகும்.
  6. ஆண் குழந்தைகளிடம் பெண்ணுக்கான அடையாளங்கள் தெரிவதும் இந்த நெருக்கடி தோன்றுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். இவ்வாறு தான் பெண் குழந்தைகளிடமும்.
  7. பரம்பரை அலகு மற்றும் ஹோர்மோன் தாக்கங்களும் காரணமாய் இருக்கக் கூடும்.
பரிகாரம்
  1. பெற்றோர் தனது பால் நிலைக் கேற்றவாறு குழந்தையுடனான உறவைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். அப்போது குழந்தைகளிடம் பால் நிலை ஒருங்கிசைவு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பெற்றோர் தனது பால் நிலைக்கேற்ற குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குறைந்தது கிழமையில் ஒரு மணித்தியாலமோ அல்லது இரண்டு மனித்தியாலங்களோ இருவரும் ஒன்றாக கலக்க வேண்டும். அதாவது இருவரும் பங்கு கொள்ளக் கூடிய விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். தந்தை இல்லாவிட்டால் நெருங்கிய உறவினர்களில் யாராவது அல்லது நண்பர், நண்பிகளையாவது தேடிக் கொள்ள வேண்டும் அல்லது உளவள்த்துணை நிபுணர்களையாவது அணுகலாம் அல்லது பாடசாலை நண்பர்கள், நண்பிகளை ஏற்பாடு செய்யலாம். பெண் தன்மையுள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆசிரியரைக் கொண்டே படிப்பிக்கலாம். ஆண்களின் வரலாற்றுக் கதைகளைச் சொல்லலாம். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம் பெற்றோர் தமக்கு கிடைத்த குழந்தை ஆணையும் பெண்ணையும் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காலத்திலும் ஆண், பெண் பால் பாகுபாட்டை அதாவது ஏற்றத்தாழ்வு மனப்பாங்கை ஏற்படுத்திவிடக்கூடாது. இரு பாலினரும் அல்லது மூன்றாம் பால் நிலைக்கு திரிபடைந்தவரும் தமது குழந்தைகள் என்பதை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
  2. குழந்தையின் பால் நிலைக் கேற்ற செயற்பாடுகளை மதித்து நடப்பதும் பெற்றோரின் கடமையாகும். குழந்தை தனது பால் நிலைக் கேற்ற செயல்களைப் புரியும் போது பெற்றோர் அதனைப் பாராட்ட வேண்டும். அதாவது பெண் தன்மையுள்ள ஆண் குழந்தை ஆணுக்குரிய செயற்பாடுகளைப் புரியும் போது பாராட்ட வேண்டும். உதாரணமாக நீ மிச்சம் திறமையான பொடியன் ”எதிர் காலத்தில் நல்ல வீரனாக/நல்ல வீராங்கணையாக வருவாய் என்றவாறு பாராட்டலாம் அப்போது அக் குழந்தை அச் செயற்பாடுகளை தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கும். அவ்வாறே குழந்தை செய்வதற்கேற்ற ஜந்தாறு செயற்பாடுகளைப் பட்டியலிட்டுக் கொள்ளலாம். ஒரு ஆண் குழந்தை செய்ய வேண்டிய வேலைகளை ஒரு கரும் பலகையில் எழுதியும் வைக்கலாம். ஆண் குழந்தையின் விளையாட்டுக்களை சகோதரனுடன்/நண்பர்களுடன் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யலாம். குழந்தை விரும்பும் உணவுப் பொருளை அல்லது விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். சில வாரங்களுக்கு இப்பணியைச் செய்துவிட்டு புதிய விடயங்களையும் சேர்த்துக் கொள்ளமுடியும். உதாரணமாக அடுத்த கட்டத்தில் உடல் மொழியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கலாம்.
  3. திருப்தியின்மையை வெளிப்படுத்தல் அடுத்த பரிகாரமாகும். பால் நிலைக்கு பொருத்தமற்ற நடத்தைகளை தாங்கள் விரும்ப வில்லை என்பதை பெற்றோர் தெளிவாக வெளிப்படுத்துவதன் ஊடாகவும் இப்பிரச்சினைக்கு பரிகாரம் காணலாம். நீ தாதியாக வருவதைவிட விமானியாகவருவதையே நான் விரும்புகின்றேன். எதிர் காலத்தில் நிச்சயம் சிறந்த விமானியாக வருவாய் என்று நம்புகின்றேன். இந்த விளையாட்டுப் பொருட்களை பெண் குழந்தைகள் விளையாடுவதைத்தான் கண்டிருக்கிறேன். அல்லது ஆண் குழந்தை பெண் குழந்தையைப் பற்றி வினவும் போது அதில் கவனம் காட்டாது விட்டு விடலாம். இந்த மாதிரி விடயங்களை பெண் குழந்தைகள்தான் பேசுவார்கள். எனக்கு அவ்வாறு கதைப்பது பிடிப்பதில்லை என்றவாறு கூறலாம்.
  4. பிரதீயீடு அல்லது மாற்றிடு செய்வதன் மூலமும் இப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காணலாம். பெண் குழந்தையாக இருக்க விரும்பும் ஆண் குழந்தைகளுக்கு சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாடக அரங்குகளில் பெண்ணாக நடிக்க வைக்கலாம். அவ்வாறே பெண் குழந்தை ஆண் வேடத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் அந்த உணர்வு பூர்த்தி செய்யப்பட்டு அவ்வாறான தேவைகளின் போது மாத்திரம் அச்செயற்பாடுகளை வெளிப்படுத்தக் கூடியதாக மாறி தனது பால் நிலை அடையாளத்தைத் தக்கவைக்க உதவும். நாடகத்தில் சிகிச்சை அரங்கு, நோய் தீர்க்கும் அரங்கு என்று ஒரு வகை இருக்கிறது. அதனை இதற்குப் பயன் படுத்தலாம்.
குழந்தை வெட்கப்படும் அளவிற்கு அதன் பால் நிலை கறாராக வரையறை செய்வதோ அல்லது குழந்தைகளின் மனதில் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுவதோ, ஹராம் என்று கண்டிப்பதோ பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பால் நிலை அடையாளம் என்பது ஒரு வார்ப்புத்தான் என்பதை இன்று சமூக, மானுடவியல் ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆண், பெண் என்பது எமது மனங்களில் உள்ள கட்டமைப்புத்தான், அல்குர் ஆனில் அல்லாஹ் மனிதர்களைச் சோடியாகப் படைத்தேன் என்றுதான் கூறியுள்ளான். ஆணாகவும் பெண்னாகவும் படைத்தேன் என்று கூறவில்லை. சோடி என்பது இணை என்பதாகும். இணையில் ஏற்றத்தாழ்வு கிடையாது. இரண்டும் சமமாக இருந்தால்தான் சோடி அந்தஸ்தைப் பெறமுடியும். சோடியில் அச்சமத்துவம் இருக்க முடியாது. ஆண் X பெண் என்ற கட்டமைப்பு கட்டவிழ்க்கப்பட்டு வெகு நாளாகிவிட்டது. மூன்றாம் பால் நிலை பற்றியும் அல்குர் ஆன் குறிப்பிட்டுள்ளதும் அல்லாஹ் தன்னை பால் நிலைக்கு அப்பாற்பட்டவனாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் மூன்றாம் பால் நிலையினருக்கு வாரிசுரிமைச் சட்டம் இயற்றப் பட்டிருப்பதும் நாம் இன்றைய யுகத்தில் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான விடயங்களாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக