அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இலங்கை முஸ்லிம் சினிமா 3



எம். ஏ. கபூர்

ஒளிப்பதிவாளராக சினிமா உலகில் புகுந்த ஒரு முஸ்லிம் கலைஞர் பல சிங்கள, தமிழ்படங்களை நெறியாள்கை செய்தவர். பல சிங்களைப் படங்களைத் தயாரித்து வெற்றி கண்டவர். அப்படி வெற்றிகள் பல கண்ட அந்தக் கலைஞர் யார்? அவர்தான் தாலு முஹையத்தீன் அப்துல் கபூர்.
மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட எம். ஏ. கபூர் சினிமா ஆர்வம் காரணமாக சிலோன் ஸ்டூடியோவில் சேர்ந்து கொண்டார். அவரது திறமை காரணமாக அங்கு நிரந்தர ஒளிப்பதிவாளர் பதவி கிடைத்தது. அதன் பின்பு தனியார் படங்களுக்கு ஒளிப்பவு செய்தார்.
இலங்கையில் இதுவரை 33 தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு இவரே ஒளிப்பதிவாளர். கடமையின் எல்லை, மஞ்சல் குங்குமம், நிர்மலா, டாக்ஸி ரைவர், தெய்வம் தந்த வீடு, நெஞ்சுக்கு நீதி, தென்றலும் புயலும், இரத்தத்தின் இரத்தமே போன்ற எட்டுப் படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவாளராக விளங்கினார்.
தென்னிந்தியாவில் சினிமாஸ்கோபில் கலரில் பல தமிழ்ப்படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் முதலாவது சினிமாஸ்கோப் கறுப்பு வெள்ளைப் படம் இலங்கையில்தான் தயாரிக்கப்பட்டது. முதலாவது கறுப்பு வெள்ளை (தமிழ்) சினிமாப்படமான தெய்வம்தந்த வீடு படத்திற்கும் கபூரே ஒளிப்பதிவு செய்தார். தென்றலும் புயலும் என்ற படத்தின் இயக்குனரும் இவரே.
மிக அதிகமாகவே சிங்களத்திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவை 250 படங்களுக்கு மேல் இருக்கும். பல சிங்களப் படங்களை இவர் தயாரித்திருக்கிறார். சாகரயே திலினய என்ற படம் பெருவெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கியதுடன் ஒளிப்பதிவையும் இவரே கவனித்தார். சரசவிய எனும் பத்திரிகை வருடாவருடம் சிறந்த கலை ஒன்றுக்கு பரிசு வழங்கிவருகிறது. இந்தப் பரிசை இவர் மூன்று முறை பெற்றிருக்கிறார்.
எம். ஏ. கபூர் மன்னாரில் கலைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். மதார் முஹைதீன் மீரா உம்மா தம்பதியினரின் மகனாய் 1935 இல் பிறந்த இவர் ஜனாபா ரஷீதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இவரது அண்ணன் வித்துவான் எம். ஏ. ரஹ்மான் ஓர் எழுத்தாளர், கவிஞர். அதேபோல் தம்பியார் கவிஞர். கலைவாதி கலீல் நாடறிந்த சிறந்த கவிஞர்.
மன்னார் சாந்த சேவியர் கல்லூரியிலும் அல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாளத்திலும் தமிழ், ஆங்கில மொழி மூலம் எஸ். எஸ். சி வரை படித்தார். சிலோன் ஸ்டூடியோவில் சாதாரண அதிகாரியாக பனியாற்றி வந்த மாமனார் யு. எஸ். ஹமீது மூலம் சிலோன் ஸ்டூடியோவில் இணைந்தார். ஆரம்பகாலங்களில் பல பிரிவுகளில் பணியாற்றிவந்தபின் கமராப்பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பின் உதவி ஒளிப்பதிவாளராகவும் இரசாயன உதவியாளராகவும் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
கபூர் தயாரித்து இயக்கிய அத்தனை படைத்திற்கும் தானே ஒளிப்பதிவு செய்தார். இலங்கையில் சினிமாத்துறை நலிவடைந்திருந்த காலப்பிரிவில் கபூரும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். ஆனால் அவர் தொலைக்காட்சித் துறைக்கு ஓடிவிடவில்லை. தொலைக்காட்சி சேவைதான் அவரை நாடிவந்தது. வெளிக் அத்தர அலுத் இரக் (வெட்டவெளியில் ஒரு புதுக்கோடு) என்ற தொலைக்காட்சி நாடகத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ரூபவாஹினியில் தொடராக ஒளிபரப்பட்ட இந்த நாடகத்தை பலரும் பாராட்டினர்.
சிங்களவரும் தமிழலும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த ஒரு அமைதியான மீனவக்கிராமத்தில் இனப்பிரச்சினை தோன்றுகிறது. தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்குகின்றார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைக் கூறுகிறது கதை. சிங்கள – தமிழ் ஒற்றுமை பற்றிப் பேசும் திரைப்படங்களும் டிவி நாடகங்களும் அதிகமாக தயாரிக்கப்பட்ட இக்காலத்தில் இந்நாடகவும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றாகும்.
தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிப்படங்களிலும் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பதிவாளராக இருந்துள்ள அதே நேரம் சிலபடங்களின் இயக்குனராகவும் இருந்துள்ளார். இதுவரை 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களுக்காக 50 க்கு மேற்பட்ட பரிசுகளையும் பெற்றுள்ளார். ஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூருக்கு சினிமாவில் பணியாற்றிமைக்காக பல விருதுகள் கிடைத்துள்ளன. முஸ்லிம் சமைய கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட முஸவ்விர் மும்தாஜ் என்ற பட்டமும் ஒன்றாகும். இலங்கை – இந்திய நடிகர்கள் நடித்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே என்ற படம் மட்டுமே தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது. அதுவும் ஒருவார காலம் மட்டுமே ஓடியது. சென்னையிலிருந்து வெளிவரும் த ஹின்டு பத்திரிகை அப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதியபோது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூரைப்பற்றி பாராட்டி எழுதியது. விமர்சனத்தை வாசித்த இயக்குனர் ஸ்ரீதர் எம். ஏ. கபூரை தன் படம் ஒன்றுக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தாராம். ஆனால் பயனப் பிரச்சினையால் அவ்வேண்டுகோளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனினும் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட போது அவற்றுக்கு கபூர் பக்கபலமாக நின்றார். அதன்காரணமாக ஆரம்பகால தமிழ் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றும் வாய்ப்பு இவருக்கே கிடைத்தது. பல தமிழ்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம். ஏ. கபூர் நெறியாண்ட ஒரே தமிழ் படம் தென்றலும் புயலும் என்பதாகும். திரையுலகில் நீண்ட அனுபவம் உடைய இவர் தன் திறமையை இப்படத்தில் காட்டினார்.
இவரது திறமையை அப்பெழுது பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின. முக்கியமாக கபூரின் ஒளிப்பதிவையும் நெறியாள்கையையும் பாராட்டி எழுதின. வீரகேசரியில் இப்படத்தைப் பற்றி டி. ஆர். டி விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். ராஜேஸ்வரி பிலிம்ஸ் வேதாவின் தென்றலும் புயலும் படத்தில் கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். தென்னகப் படங்களுக்கு நிகராக மலையகத்து எழில்காட்சிகளைப் படமாக்கி, இயக்கி எம். ஏ. கபூர் எமது மனதைக் குளிரவைக்கிறார் என்று விமர்சனம் எழுதினார். இப்படிப் பல பத்திரிகைகளும் எம். ஏ. கபூரைப் பாராட்டி எழுதின.
1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பறாளையூர் பிரேம காந்தன் மின்விழி என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். அதனது ஒருமாத இதழ் தென்றலும் புயலும் சிறப்பு இதழாக வெளிவந்தது. அந்த சிறப்பு மலரில் எம். ஏ. கபூரின் சாதனைகளைப் பற்றி பிரேமகாந்தன் விரிவாக எழுதினார்.
எம். ஏ. கபூர் இப்போது பல சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார். அவற்றில் சில தமிழ், சிங்கள இன ஒற்றுமையை மேம்படுத்துவனவாக அமைந்துள்ளன. இவ்வாறான நாடகங்களை சிங்கள இயக்குனர்கள் உருவாக்கும் பொழுது தமது இனத்தின் பார்வையூடாகவே படைப்புகளையும் உருவாக்குகின்றார்கள். தமிழ் கதாபாத்திரங்கள் யதார்தத்திற்குப் புறம்பானவையாக உருவாக்கப்படுகின்றன.
எம். ஏ. கபூர் போன்றோர் தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கும் பொழுது சிறுபான்மையினரின் கண்ணோட்டத்திலேயே படைப்புகளை உருவாக்கிக் காட்ட முயலவேண்டும். அப்பொழுதுதான் அவை யதார்த்தமான தமிழ் பாத்திரங்களாக அமையும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக